Sunday, May 26, 2013

அகழ்வாரைத் தாங்கிய நிலம்

ஆறு வருடங்களுக்கு முன்னதாக..ஒரு குளிர் பிரதேசமாகவே பெங்களூரை பார்த்திருக்கிறேன். மலைவாசிக் குதிரைக்காரன் போல் உடல் மேல் ஒரு கம்பளிக் கோட்டுச் சட்டையை போட்டுக் கொண்டுதான் எப்போதும் இந்த நகரம் முழுதும் திரிந்திருக்கிறேன். ழையோடு  சேர்த்து பனியாகவும் பெய்து எப்போதும் ஈரத்தை வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நிலம். 

ஆனால் போன வருடம் வழக்கமான மழைக்காலம் இங்கே பொய்த்துப் போனது. நம்ம குற்றாலத்தில் சீசன் ஆரம்பித்த போது  இங்கே தூறல் மழை கூட பெய்யவில்லை. சென்ற வருடம் பெங்களுரின் "மழை மறந்த வருடம்" என வானிலை ஆய்வு அறிவித்தது.

இந்த முறை சீக்கிரமே கோடை காலம்  துவங்கி விட்டது. பூர்வீக பெங்களூர் மக்களுக்கு இந்த கோடையின் நீளம் புதிதாகவும் , அதன் சூடு அசாதாரணமாகவும் இருக்கிறது.

ஆனால் இந்த வெப்பம் எனக்கு ஒன்றும் புதிதில்லை. இந்த வெய்யிலும் கானலும் எனக்கு மிகவும் பழகிப்போனவைதான்.

இங்கே இப்போது ஆரம்பிக்கும் மழையற்ற வறட்சி. தண்ணீர்ப் பஞ்சம் எல்லாம் குழந்தைப் பருவத்திலேயே சாதாரணமாகிப் போனவை எனக்கு. மரங்கள் வெட்டப்பட்ட சாலைகளில்  நடக்கும் பொது உச்சியில் விழும் சூரியத் தணலுக்கும் எனக்கும் நெருக்கம் அதிகம்.

ஆனால் ,, என் சொந்த நிலத்தின் வானிலைக் கூறுகள்  இந்த நிலத்தின் உண்மைத் தன்மை மாறுபட்டு வெளிப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

மரங்கள் கொண்டாடிய நிலம் இன்று  நிழல்கள் தொலைத்து வெய்யில் நிலமாய் கருகிப்போகும் கதையை எப்படி பதிவு செய்வது?? 

இந்த முரண்பாட்டுத் தன்மையை உருவாக்கியதில் இந்த நிலம் செய்த தவறு என்னென்ன ??


  1. வெளிக்காற்றின் குளிரைச் சூறையாடி தொழிற்சாலைகளுக்குள் கொண்டு செல்லும் ஏ சி அறைகள் நிரம்பிய கட்டிடங்களைத் தாங்கி நின்று..நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தது...
  1. தனது தொண்ணூறு ஏரிகளில் என்பது ஏரிகளைமூடி விட்டு ஆங்கே அடுக்கு மாடிக் கட்டிடத்தின் அழகைச் சுமந்தது..
  1. தம் மக்கள் சொகுசுப் பேருந்து பயணம் செய்ய... குறிகிய தனது சாலைகளை அகலப்படுத்தியது , அதற்கு குறுக்கிட்ட மூத்த மரங்களை வெட்டிப் பிடுங்க அமைதி காத்தது .
  1. காடுகளாய் இருந்த பரப்பளவின் பாதிக்கு மேல் பத்திரப் பதிவிற்கு விலை போக பொறுமை காத்தது;
  1. etc etc


இங்கு வாழும் மென்பொருள்  மனிதர்களில் நானும் தான் ஒருவன். 

இந்த கோடையின் சூட்டை "இயற்கை என் மீது சூடு வைப்பது போல்" உணர்கிறேன். 

Wednesday, November 28, 2012

நண்பன் அறையில் வெந்நீர் குளியல் , நாய்டு மெஸ் அக்கௌண்டில் சாப்பாடு

வேலை தேடி மாநகரம் வரும் ஒவ்வொருவனுக்கும், ஏற்கனவே அங்கு  வேலைபார்த்துக் கொண்டிருக்கும்  ஒரு நண்பன் அறை காத்திருக்கும். 

பாவனை பேச்சு உடை நடை முற்றிலும் மாறிப் போன அந்த நண்பன் வேக வேகமாக கிளம்பிக் கொண்டிருப்பான் ஆபீசுக்கு.  பக்கத்து ஓட்டலில் அவன் அக்கௌண்டில் இட்லி வடை வாங்கி கொடுத்து விட்டு , சாயங்காலம் பாக்கலாம் என சொல்லி முதுகில் மாட்டிய லேப்டாப் பேக்கோடு விரைவான்.

அவன் ரூமில் கம்ப்யுட்டரில் நேற்று ரிலீசாகிய புது படம் டோரென்ட்டில் முழுமையாக தரவிறக்கம் ஆகியிருக்கும். அதை பார்த்துக் கழியும் முதல் நாள் பகல்.

Friday, September 7, 2012

குண்டோதரர்களின் பூமியில் - முதல் நாள்

தமிழ் சினிமா உமிழ்ந்த கோர எச்சில் முகத்தோடு , படித்து முடித்து விட்டோம் என தனியாக மென்பொருள் வேலை தேடி பெங்களூர் வரும் ஒவ்வொரு தமிழனையும் தனது குளிர்ந்த காற்றால் வருடி வரவேற்கிறது கர்நாடக எல்லை. ஓசூர் பஸ்டாண்டில் டிபன் சாப்பிடும் போது வந்த வீட்டு ஞாபகத்தை மெல்ல விரட்டும் குளிர்ந்த காற்றோடு கூடிய பெங்களூர் பசுமை. 


இன்னொரு பக்கம் , முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் அன்ரிசர்வு கோச்சில் வரும் யாருக்கும் கண்டோன்மென்ட் ஸ்டேஷன் வந்தவுடன் உறக்கம் கலையும். அங்கிருந்து மஜெஸ்டிக் வரை,  ரயில் சன்னல் வழியாக மொய்க்கும் வாகன விளக்குகள் பெங்களூரின் அதிகாலைக் காட்சியை அறிமுகம் செய்யும் . வாய் கொப்புளிக்கும் இடைவேளையில் , மைசூருக்கு தினசரி ரயிலில் வேலைக்குப் போகும் ஒரு கன்னடக் கூட்டம் , ஏறியவுடன் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக இருக்கைகளை ஆக்கிரமிப்பு செய்வதில் தொடங்கி... பணம் செய்ய ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்வை நாசூக்காக கற்றுத்தரும் குண்டோதரர்களின் பூமி.