Friday, September 7, 2012

குண்டோதரர்களின் பூமியில் - முதல் நாள்

தமிழ் சினிமா உமிழ்ந்த கோர எச்சில் முகத்தோடு , படித்து முடித்து விட்டோம் என தனியாக மென்பொருள் வேலை தேடி பெங்களூர் வரும் ஒவ்வொரு தமிழனையும் தனது குளிர்ந்த காற்றால் வருடி வரவேற்கிறது கர்நாடக எல்லை. ஓசூர் பஸ்டாண்டில் டிபன் சாப்பிடும் போது வந்த வீட்டு ஞாபகத்தை மெல்ல விரட்டும் குளிர்ந்த காற்றோடு கூடிய பெங்களூர் பசுமை. 


இன்னொரு பக்கம் , முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் அன்ரிசர்வு கோச்சில் வரும் யாருக்கும் கண்டோன்மென்ட் ஸ்டேஷன் வந்தவுடன் உறக்கம் கலையும். அங்கிருந்து மஜெஸ்டிக் வரை,  ரயில் சன்னல் வழியாக மொய்க்கும் வாகன விளக்குகள் பெங்களூரின் அதிகாலைக் காட்சியை அறிமுகம் செய்யும் . வாய் கொப்புளிக்கும் இடைவேளையில் , மைசூருக்கு தினசரி ரயிலில் வேலைக்குப் போகும் ஒரு கன்னடக் கூட்டம் , ஏறியவுடன் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக இருக்கைகளை ஆக்கிரமிப்பு செய்வதில் தொடங்கி... பணம் செய்ய ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்வை நாசூக்காக கற்றுத்தரும் குண்டோதரர்களின் பூமி.